கடந்த 25ஆம் திகதி வெளியிடப்பட்ட விளக்க அறிக்கையிலேயே இந்த மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் கருத்துக்கள் சூழலிலிருந்து விலக்கிப் புரிந்துகொள்ளப்பட்டு, தவறான தலைப்புகளுடன் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 23ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழிப்பதற்கான 16 நாட்கள் தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்விடயம் குறித்துப் பேசியிருந்தார்.
இதன்போது, சாதி உள்ளிட்ட சமூக அடையாளங்களைக் குறிப்பிட்டு வெளியிடப்படும் திருமண விளம்பரங்களால் சில சமூகப் பிரிவினர் பாகுபாடுகளுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றனர் எனவும், இவ்விடயத்தில் அரசாங்கம் தலையிட வேண்டுமா எனவும் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், தனிப்பட்ட தீர்மானங்களை மேற்கொள்ளும்போது சில விடயங்களைப் புறக்கணிக்க முடியும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், சமூக ஊடகங்களில் மூடநம்பிக்கைகள், சூனியச் செயற்பாடுகள் மற்றும் மாந்திரீக நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் தவறான விளம்பரங்கள் அதிகரித்து வருவது குறித்தும் அமைச்சர் கவலை வெளியிட்டிருந்தார்.
இவ்வாறான விளம்பரங்கள் சமூகத்திற்கும் இளம் தலைமுறையினருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், ஊடகங்களுக்கான ஒழுக்க நெறிமுறைகளை உருவாக்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும்போது இத்தகைய பிரச்சினைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
எனினும், சாதி அடிப்படையிலான திருமண விளம்பரங்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ, அதேபோன்று எந்தவொரு கலாசார அடையாளத்தையும் விமர்சிக்கவோ அல்லது கேள்விக்குட்படுத்தவோ அமைச்சரின் கருத்துக்களில் எவ்வித நோக்கமும் வெளிப்படுத்தப்படவில்லை என அமைச்சரின் அலுவலகம் தனது விளக்க அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக