பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலைகளிலேயே வைத்திருப்பதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்குத் தட்டுப்பாடின்றி முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (23) வர்த்தக வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலையை அதிகரிக்காமல், தற்போதைய விலையிலேயே விற்பனை செய்ய முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணங்கியுள்ளன.
சந்தையில் கோழி இறைச்சியின் விலை ஏற்கனவே குறைவடைந்து வருவதுடன், பண்டிகைக் காலத்தில் எவ்வித தட்டுப்பாடுமின்றி விநியோகிக்கவும் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் உறுதியளித்துள்ளன.
உற்பத்திப் பாதிப்பு: கால்நடைத் தீவன மூலப்பொருட்களின் தட்டுப்பாடு, தீவனங்களின் தரக் குறைபாடு மற்றும் போதிய விஞ்ஞான அறிவின்மை ஆகியவற்றால் சிறு பண்ணையாளர்களின் முட்டை உற்பத்தி ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது.
கால்நடைத் தீவனங்களின் தரத்தை உறுதிப்படுத்தவும், தீவன உற்பத்தியாளர்களைப் பதிவு செய்து தொழிற்சாலைகளைப் பரிசோதிக்கவும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அமைச்சர் வசந்த சமரசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக