திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், ஒருமுறை நடவடிக்கையாக வரும் கார்த்திகை தீபத்தன்று மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற நிபந்தனைகளுடன் அனுமதித்துள்ளது.
எனினும், இந்த அனுமதி என்பது இந்த வழக்கின் இறுதி ஒப்புதலாகக் கருதப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல், கார்த்திகை திருநாளன்று பக்தர்கள் அனைவரையும் மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரியும், தொல்லியல் துறை அனுமதி பெற வேண்டும் என்ற சரத்துக்கு எதிராகவும் ராம ரவிக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
அதேநேரத்தில், ஒருமுறை நடவடிக்கையாக வரும் கார்த்திகை தீபத்தன்று (நவம்பர் 24) தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுகிறது.
இது இந்த வழக்கின் இறுதி ஒப்புதலாகக் கருதப்படக்கூடாது. தேவஸ்தானம் மற்றும் அரசு அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே விளக்கு ஏற்றுவதற்கு செல்ல முடியும்.
பொதுமக்கள் செல்ல முடியாது. தேவைப்பட்டால் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக