நவம்பர் 27 ஆம் திகதி தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம், சாட்டி மாவீரர் துயிலுமில்ல பகுதியில் மாவீரர்நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்ப பணிகள் நேற்றைய தினம் (18) மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது.
வேலணை பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் ஏற்பாட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எந்த தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் சாட்டியில் உணர்வெழுச்சியாக வழமை போன்று இம்முறையும் மாவீரர் நாள் அனுஸ்டிப்பு முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சாட்டி மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள காணிக்கு தனிநபர் உரிமை கோரியுள்ளதுடன், தமது காணியில் மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுக்க கூடாது எனவும் , அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், பொலிஸாரினால் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைகள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், வழக்கின் நீதிமன்ற கட்டளை தமக்கு சாதகமாக அமைந்தால் , துயிலும் இல்லம் அமைந்துள்ள காணியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும் , கட்டளை தமக்கு எதிராக கிடைக்கபெற்றால் , துயிலுமில்லம் முன்பாக உள்ள , வேலணை பிரதேச சபைக்கு சொந்தமான காணிக்குள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக