மன்னார் பாத்திமாபுரம் பகுதியில் வீதி ஒன்றை அமைக்கும் பணியின் போது, எமில் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் மன்னார் நகரசபை தலைவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி அடிதடியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் எமில் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவல்களின்படி, மன்னார் நகரசபைக்கு சொந்தமான எமில் நகர் எல்லைக்குட்பட்ட பாத்திமாபுரம் பகுதியில் உள்ள நகரசபை வீதிகளில் கிரவல் பரப்பும் பணிகள் இடம்பெற்று வந்துள்ளன. இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தமது பகுதியில் உள்ள வீதியையும் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார். குறித்த நபர், தமது பகுதி வீதியை அமைத்து தர வேண்டும் என பலமுறை நகரசபை தலைவரிடம் முன்பே கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றையதினம் (30) வீதி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த போது, நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் தமது பகுதி வீதி அமைக்கப்படாமல், தனிப்பட்ட நபர் ஒருவருக்காக வீதி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவது நியாயமா எனக் கேள்வி எழுப்பியதன் காரணமாக, குறித்த நபருக்கும் நகரசபை தலைவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், குறித்த நபரை அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு நகரசபை தலைவர் அறிவுறுத்தியதாகவும், அதற்கு அவர் மறுத்ததால் நிலைமை மேலும் தீவிரமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நகரசபை தலைவர் குறித்த நபரை தள்ளி விட்டு தாக்குதல் நடத்தியதாக, காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன் பின்னர் இருவரும் மாறிமாறி தாக்கிக் கொண்டதுடன், பரஸ்பரம் கற்களையும் எறிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அதிகளவு காயங்களுக்கு உள்ளான எமில் நகரைச் சேர்ந்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவத்தின் போது கற்கள் எறியப்பட்ட நிலையில் அங்கு இருந்த மன்னார் நகரசபை பெண் உறுப்பினர் ஒருவரும் காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுவதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் அவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக