மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகளால் உலகளாவிய நிதி கட்டமைப்புகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படக்கூடும் என நிதி ஸ்திரத்தன்மை வாரியத்தின் தலைவர் ஆண்ட்ரூ பெய்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு கரோலினாவின் அஷ்வில்லி நகரில் நடைபெறும் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கான கூட்டத்தை முன்னிட்டு அனுப்பிய கடிதத்திலேயே அவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
உலகளாவிய நிதி கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் மேற்கொள்ளக்கூடிய சைபர் தாக்குதல்கள் தற்போதைய மிக அவசரமான அச்சுறுத்தல்களில் ஒன்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் அபாயங்கள் எந்தவொரு நாட்டின் எல்லைகளுக்குள் மட்டுப்படுத்தப்படாமல், சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்றும் ஆண்ட்ரூ பெய்லி சுட்டிக்காட்டியுள்ளார்.
பல நாடுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான போதுமான வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் இன்னும் இல்லாதமை குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சைபர் தாக்குதல்கள் நடத்தப்படும் சாத்தியக்கூறுகள் தொடர்பில் பல்வேறு சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சில மேம்பட்ட ஏஐ மாதிரிகள் கணினி அமைப்புகளில் ஊடுருவ முயன்ற சம்பவங்களும் இதற்கு முன்னர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் அதிகப்படியான சந்தை மதிப்பீடுகள் மற்றும் அரசு, தனியார் துறைகளில் அதிகரித்து வரும் கடன் சுமை ஆகியவையும் உலகளாவிய நிதிச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு கூடுதல் அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜி20 கூட்டத்தில் உலக நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையை பாதிக்கக்கூடிய வளர்ந்து வரும் அபாயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக