மட்டக்களப்பு கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் 19 வயது இளைஞன் ஒருவர் கையடக்கத் தொலைபேசியை சார்ஜில் வைத்தபடி உறங்கிய நிலையில், தொலைபேசி வெடித்ததில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை (27) மாலை இடம்பெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இளைஞன் வீட்டில் உறங்கச் சென்றபோது, தனது கையடக்கத் தொலைபேசியை மின்சாரத்தில் சார்ஜ் செய்துள்ளார். சார்ஜில் இருந்த தொலைபேசியை நெஞ்சுப் பகுதியில், இதயம் இருக்கும் இடத்திற்கு அருகில் வைத்துக்கொண்டு அவர் உறங்கியதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தொலைபேசி அதிகளவில் சூடாகி வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த இளைஞரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. தொலைபேசி வெடித்ததற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சார்ஜில் இருக்கும் தொலைபேசியை உடலுக்கு அருகில் வைத்து உறங்குவது தொடர்பான பாதுகாப்பு குறித்து இந்த சம்பவம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, தொலைபேசி அதிகமாக சூடாகுதல், சேதமடைந்த பேட்டரி அல்லது தரமற்ற சார்ஜர் போன்ற காரணிகள் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சார்ஜ் செய்யும் போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிப்பது அவசியம்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக