சமூக ஊடகங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் மற்றும் சிறுவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தவறாகப் பயன்படுத்தும் இணையவழி குற்றச்செயல்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இயங்கும் சில குழுக்களில், பெண்கள் மற்றும் சிறுவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை கொள்வனவு செய்து பணத்திற்கு விற்பனை செய்வதாகக் கூறப்படும் இணையவழி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சமூக ஊடகக் குழுக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், சிலர் போலியான சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தி தனிநபர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சேகரித்து பகிர முயற்சிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி அவர்களது புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பயன்படுத்தப்படுவது தனிநபர் தனியுரிமைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
மேலும், சில சந்தர்ப்பங்களில் குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களையே இவ்வாறு தவறாகப் பயன்படுத்தி விற்பனை செய்ய முயற்சிக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், இவ்வாறான சமூக ஊடகக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பது மற்றும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சவால்கள் ஏற்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையின் சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு தொடர்பான பிரிவுகளும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவும் கிடைக்கப்பெறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் மற்றும் பெண்கள் இணையவழி குற்றங்களுக்கு இலக்காகாமல் இருப்பதற்கு குடும்பத்தினரின் விழிப்புணர்வு மிகவும் அவசியமானதாகும்.
குறிப்பாக, பெற்றோர் தங்களது பிள்ளைகள் எந்த சமூக ஊடக தளங்களை பயன்படுத்துகின்றனர், யாருடன் தொடர்பில் இருக்கின்றனர், எந்த வகையான குழுக்களில் இணைந்துள்ளனர் என்பவற்றை வயதுக்கு ஏற்ற வகையில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதேபோல், தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிரும்போது அவற்றின் தனியுரிமை அமைப்புகளையும் சரிபார்ப்பது முக்கியமாகும்.
ஒருவரின் புகைப்படம் அல்லது காணொளி அவர்களின் அனுமதியின்றி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட பதிவுகளை உடனடியாக அழிக்குமாறு கோருவதுடன், ஆதாரமாக screenshots மற்றும் தொடர்புடைய தகவல்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் தனியாக பிரச்சினையை சமாளிக்காமல், நம்பகமான குடும்ப உறுப்பினர் அல்லது பொறுப்பான அதிகாரிகளிடம் தகவல் தெரிவிப்பது அவசியம்.
பெண்கள் மற்றும் சிறுவர்கள் இணையவழி துன்புறுத்தல் அல்லது மோசடிக்கு இலக்காகியிருந்தால், தேவையான உளவியல், சமூக மற்றும் சட்ட உதவிகளைப் பெறுவதற்காக 1938 மற்றும் 1929 ஆகிய இலவச உதவி தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் தகவல் பரிமாற்றத்திற்கும் தொடர்புகளை பேணுவதற்கும் பயனுள்ளதாக இருந்தாலும், அவற்றை பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவது மிகவும் அவசியம். குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களின் தனியுரிமையை பாதுகாப்பதில் குடும்பத்தினர், சமூக ஊடகப் பயனர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக