இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முக்கிய நபராக கருதப்படும் ஷிரான் பாசிக்கின் விடுதலையை உறுதி செய்வதற்காகவும், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களை மாற்றுவதற்காகவும் சுமார் 5,000 மில்லியன் ரூபாய், அதாவது 500 கோடி ரூபாய் நிதி தயாராக வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூலங்களின் தகவலின்படி, குறித்த நிதி கொழும்பை மையமாகக் கொண்டு நிர்வகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வலையமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துபாயை தளமாகக் கொண்டு செயற்படும் முகமது சித்தீக்கின் கீழ் உள்ள நபர்கள் நிதி நடவடிக்கைகளை கையாளுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த நிதி நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக “சாண்ட்ரா” என்ற குறியீட்டுப் பெயரால் அடையாளம் காணப்படும் பெண் ஒருவர் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஷிரான் பாசிக்கின் நீண்டகால தொடர்பாளராகவும், இலங்கைக்கு அடிக்கடி பயணம் செய்பவராகவும் கூறப்பட்டாலும், அவரது உண்மையான அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்குதல் மற்றும் ஷிரான் பாசிக்கின் பொது பிம்பத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் சில ஊடகவியலாளர்கள் மீது அழுத்தம் செலுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக நிதி பயன்படுத்தப்படலாம் எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், வழக்குத் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக மூன்று ஜனாதிபதி சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள நிதி போதுமானதாக இல்லாவிட்டால், துபாயிலிருந்து மேலதிக நிதி அனுப்பப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
எனினும், மேற்குறிப்பிட்ட இலஞ்சம் மற்றும் நிதி பரிமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எதுவும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே, அவை உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகளாக அல்லாமல், தற்போது வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் தகவல்களாகவே கருதப்படுகின்றன.
இதனிடையே, பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள இரண்டு வீடுகள் மற்றும் தெஹிவளை, வெள்ளவத்தை கடலோரப் பகுதிகளில் உள்ள ஐந்து ஹோட்டல்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதை ஷிரான் பாசிக் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறித்த சொத்துக்கள் அவரது சொந்தப் பெயரில் பதிவு செய்யப்படவில்லை என்றும், நண்பர்களின் பெயர்கள் ஊடாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஷிரான் பாசிக்கின் முழுமையான சொத்து விவரங்கள் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து முன்னெடுத்து வருவதுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் அரச புலனாய்வு சேவையும் இந்த விசாரணைகளுக்கு தேவையான தகவல்கள் மற்றும் ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக