இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவர் புத்திக ஹேவாவசம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட மற்றும் தொழில்சார் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலா, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரிடம், அமைச்சின் செயலாளர் ஊடாக அவர் சமர்ப்பித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் SLTDA தலைவராக பதவியேற்றதாகக் குறிப்பிட்டுள்ள புத்திக ஹேவாவசம், தனது பதவிக்காலத்தில் தேசிய நலன் மற்றும் நிறுவனத்தின் நேர்மையை முன்னிறுத்தி பணியாற்றியதாக தெரிவித்துள்ளார்.
2024 ஒக்டோபர் முதல் 2026 ஆகஸ்ட் வரை SLTDA தலைவராக பணியாற்றிய அவர், தனது பதவிக்காலத்தில் இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தங்கள், உலகளாவிய சமூக-அரசியல் நெருக்கடிகள் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாட்டு வரம்புகள் போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இந்த சுற்றுலா சாதனை எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2025ஆம் ஆண்டில் இலங்கை 15க்கும் மேற்பட்ட சர்வதேச சுற்றுலா விருதுகளைப் பெற்றதாகவும், இதன் மூலம் உலகின் முன்னணி சுற்றுலா நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
SLTDAவில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது தனது பதவிக்காலத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்ததாகவும் தெரிவித்துள்ள அவர், புதிய தலைமையிடம் பொறுப்புகளை சுமுகமாக ஒப்படைப்பதற்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக