12.08.2026 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணி
வங்காள விரிகுடாக் கடற்பகுதி வெப்பமடையத் தொடங்கியுள்ளது. இன்று காலை 11.00 மணியளவில் இலங்கையை அண்மித்த கிழக்கு வங்காள விரிகுடாக் கடற்பகுதி 28 பாகை செல்சியஸ் என்ற அளவுக்கு வெப்ப அதிகரிப்பைக் கொண்டுள்ளது.
அதேவேளை அதிகளவிலான வெப்பநீர் பசுபிக் சமுத்திரப் பகுதியில் இருந்து இந்து சமுத்திர பகுதிக்கு கடலடிப்பகுதியினூடாக கடத்தப்படுகின்றது( படம் 3).
இதனால்.........
1. இன்று பிற்பகல் முதல் எதிர்வரும் 16.08.2026 வரை பிற்பகல் வேளைகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகள் வெப்பச் சலன மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
2. குறிப்பாக இன்று பிற்பகல் 2.00 மணி முதல் முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மழை கிடைக்கும்.
3. நாளை (13.08.2026) கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கணிசமான பகுதிகள் மழையைப் பெறும்.
இது வெப்பச்சலன செயற்பாட்டினால் கிடைக்கும் மழை என்பதனால் இடி மின்னல் நிகழ்வுகளோடு கூடியதாக இந்த மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதால் இடி மின்னல் நிகழ்வுகள் தொடர்பில் மக்கள் சற்று அவதானமாக இருப்பது அவசியம்.
அதேவேளை இலங்கையின் மத்திய, மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவா மாகாணங்களுக்கு தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 17.08.2026 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை மழை ஏனைய பகுதிகளில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மழை கிடைக்காத பகுதிகளில் அதிகளவில் உணரக்கூடிய வெப்பநிலையோடு கூடிய வானிலை நிலவும் வாய்ப்புள்ளது.
++++++++++++++++++++++++++++++++++++
பசுபிக் பிராந்தியத்தில் சூப்பர் எல்நினோ உருவாகிவிட்டது. நினோ பிராந்தியம் 3.4 இல் வெப்பநிலை (இன்று காலை 11.00 மணியளவில்) 2.89 பாகை செல்சியஸ் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
அரபிக்கடல் பகுதியில் இந்து சமுத்திர வெப்பச்சுட்டெண்/ இந்து சமுத்திர இருமுனை ( Indian Ocean Dipole) 0.71 என்ற நேர்மறை பெறுமானத்தை எட்டியுள்ளது.
இதனால்.....
இம்முறை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அனைத்து வானிலை முன்னறிவிப்பு மாதிரிகளும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
********************************************
முன்னரே குறிப்பிட்டபடி எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் குறைந்தது 03 புயல்களோடு 05 க்கு மேற்பட்ட தாழமுக்க நிகழ்வுகள் இலங்கையை அண்மித்து உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
********************************************
எல்நினோ , இந்து சமுத்திர இருமுனை மற்றும் தாழமுக்க செயற்பாடுகளினால் அதிக கனமழையும் அதனோடு இணைந்த வெள்ளம் மற்றும் அதனோடு இணைந்த நிலச்சரிவு நிகழ்வுகளும் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஏற்படும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கனமழையுடனான வெள்ள அனர்த்தங்கள் நிகழும் என எதிர்வுகூறப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கான போதுமான தயார்ப்படுத்தல்களை நாம் இன்னமும் மேற்கொள்ளவில்லை.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்த எல்நினோ அதிதீவிர வானிலை நிகழ்வின் காரணமாக உருவாக்கக்கூடிய வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்ள நாம் இன்னமும் தயாராகவில்லை.
1. சாத்தியமான வெள்ள அனர்த்தத்தைத் தணிக்கவல்ல குளங்களைத் தூர்வாரி ( நீரைத் தேக்கி வைத்திருக்கும் களிமண்படையை அகற்றாமல்) அவற்றை நாம் அகலப்படுத்த வேண்டும்.
2. வெள்ளநீர் வழிந்தோடும் வாய்க்கால்களை துப்புரவாக்குதல் வேண்டும். குறிப்பாக யாழ்ப்பாண நகரப்பகதிகளில் சற்றுக் கனமழை கிடைத்தாலே நகர வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடிய வாயக்கால்களின் அடையல்கள் அகற்றப்பட்டு துப்புரவாக்கப்பட்டு நீர் இலகுவாக வழிந்தோடி கடலைச் சென்றடைய ஏற்ற வகையில் அவை மாற்றப்படல் வேண்டும்.
3. கனமழைக்காலத்தில் நீர் தேங்கி பாதிப்புக்களை ஏற்படுத்தும் குழிகளை, பள்ளங்களை அடையாளம் கண்டு அவற்றை மூடி விடுதல் வேண்டும்.
அதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிவரை அதிக வெப்பநிலையோடு கூடிய வானிலை நிலவும் வாய்ப்புள்ளது.
கடந்த 01.06.2026 இலிருந்து இன்று 12.08.2026 வரை வடக்கு மாகாணத்தில் சராசரியாக ( ஒரு சில இடங்களில் மட்டுமே) 6.9 மி.மீ. மழை கிடைத்துள்ளது. ஆனால் இந்த 73 நாட்களில் 249 மி.மீ. நீர் ஆவியாகி உள்ளது.
எங்களுடைய நீர்ப்பயன்பாட்டுப் பாங்கில் நாம் இக்காலப்பகதியிலேயே அதிக நீரைப் பயன்படுத்துவதுண்டு (ஆலயங்களில் பெருந்திருவிழாக்களும் இக்காலமே)
தரைக்கீழ் நீர் சார்ந்து நெருக்கடிநிலையில் நாம் உள்ளோம். ஆனால் பல இடங்களில் எல்நினோ, மற்றும் தற்போது நிலவும் வரண்ட வானிலை, தற்போது நாம் கொண்டுள்ள தரைக்கீழ் நீர் வளத்தின் அளவு என எதனையும் கருத்தில் கொள்ளாது நீரை வீண்விரயம் செய்கிறோம். நீரைத் துஸ்பிரயோகம் செய்கின்றோம்.
வானிலை சார்ந்த அனர்த்தங்கள் எப்போதும் வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடியன. ஆனால் அது எமது தயார்ப்டுத்தல்களிலும் தனிமனித விழிப்புணர்விலுமே தங்கியுள்ளது.
- நாகமுத்து பிரதீபராஜா -
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக