இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சா மாவட்டத்தில் உள்ள டோங் கிராமம், நாட்டில் முதலில் சூரிய உதயத்தை காணக்கூடிய இடங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.
இந்தியா, சீனா மற்றும் மியான்மர் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள டோங் கிராமம், உயரமான மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட இயற்கை எழில் நிறைந்த பகுதியாக உள்ளது.
கோடைக்காலங்களில் இங்கு அதிகாலை 4.30 மணியளவிலேயே சூரிய உதயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதிகாலையில் சூரிய உதயத்தை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளிடையே இந்த கிராமம் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.
டோங் கிராமத்தை சென்றடைய வாலாங் பகுதியில் இருந்து மலைப்பாதை வழியாக பயணம் மேற்கொள்ள வேண்டும். இந்தப் பயணத்தின் போது லோகித் மற்றும் சதி நதிகள் சங்கமிக்கும் அழகிய பகுதியையும் காண முடியும்.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த கிராமத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சுமார் 15 பேர் மட்டுமே வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் எளிமையான வாழ்க்கை முறையும், அப்பகுதியின் அமைதியான சூழலும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது.
அடர்ந்த காடுகள், பனிமூடிய மலைச் சிகரங்கள் மற்றும் இயற்கையான அமைதியான சூழல் காரணமாக, டோங் கிராமம் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
இங்கு செல்ல விரும்புபவர்கள் முதலில் தேஸு அல்லது திப்ருகர் பகுதிகளை சென்றடைந்து, அங்கிருந்து டோங் கிராமத்தை நோக்கி பயணிக்க வேண்டும். மேலும், அருணாச்சலப் பிரதேசத்திற்குள் செல்ல இந்திய குடிமக்களுக்கு Inner Line Permit (ILP) எனப்படும் உள்வரி அனுமதிச்சீட்டு அவசியமாகும்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், டோங் கிராமம் இயற்கை அழகும் தூய்மையும் மாறாமல் காணப்படும் ஒரு தனித்துவமான இடமாக உள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக