அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு தாழவட்டுவான் சந்தி பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த சிறிய ரக பட்டா வாகனம், தாழவட்டுவான் சந்தியை அண்மித்தபோது சாரதிக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் திடீர் சுகயீனம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரத்தில் அமைந்திருந்த அபிவிருத்தி லொத்தர் விற்பனை நிலையத்திற்குள் வேகமாக பாய்ந்து மோதியதுடன், பின்னர் தலைகீழாகப் புரண்டுள்ளது.
விபத்தின் தாக்கத்தால் லொத்தர் விற்பனை நிலையத்தின் தூண்கள் சேதமடைந்ததுடன், கடையும் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த வாகன சாரதியும், லொத்தர் விற்பனை நிலைய உரிமையாளரும் மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி வாகன சாரதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருபவர் லொத்தர் விற்பனை நிலைய உரிமையாளரான 56 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக