நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர், அந்த நாளில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். தனது பணிக்காலத்தில் இதுபோன்ற வன்முறையை இதற்கு முன்பு ஒருபோதும் கண்டதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது விளக்கத்தின் படி, சம்பவம் இடம்பெற்ற தினத்திற்கு முந்தைய நாள் சிறைச்சாலையில் நிலைமை அமைதியாக இருந்ததாகவும், சம்பவம் நிகழ்ந்த நாளில் நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் கைதிகளைச் சந்திக்க உறவினர்கள் வருகை தரும் நிகழ்வுகளுக்காக அதிகாரிகள் வழக்கமான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததாகவும் கூறினார்.
அந்த நேரத்தில் சில கைதிகள் சிறைச்சாலை மருந்தகத்தை உடைத்து, மனநல நோயாளிகளுக்காக பயன்படுத்தப்படும் அதிக வீரியம் கொண்ட மருந்துகளை உட்கொண்டதாகவும், அதன் பின்னர் நிலைமை கட்டுக்கடங்காத வகையில் மாறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக பல சிறைச்சாலை அதிகாரிகள் பணியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டிருந்ததால் பாதுகாப்பு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருந்ததாகவும், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து கூடுதல் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கைதிகளுக்கு உணவு வழங்கச் சென்ற அதிகாரிகள் மீது முதலில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர்களை மீட்கச் சென்ற மற்ற அதிகாரிகளின் கைகளில் இருந்த பெட்டன் தடிகள் பறிக்கப்பட்டு அதே ஆயுதங்களால் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், பாதுகாப்பு ஜன்னல் பகுதியில் இருந்த அதிகாரி ஒருவரை தாக்கி அங்கிருந்த டி-56 துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.
தாம் மூன்றாவது மீட்புக் குழுவுடன் சிறைச்சாலைக்குள் சென்றபோது, நூற்றுக்கணக்கான கைதிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு தாக்கியதாகவும், உடற்பயிற்சி பிரிவிலிருந்த இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட பொருட்களையும் தாக்குதலுக்குப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார். நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறியிருந்ததாகவும், அதிகாரிகளை காப்பாற்ற சில பழைய கைதிகள் முயற்சித்ததாகவும் அவர் கூறினார்.
தாக்குதலின் போது தலையில் பலத்த காயம் அடைந்ததுடன், கழுத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டு தரையில் இழுத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கிருந்து உயிருடன் வெளியேற முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்தார். பின்னர் சில பழைய கைதிகள் உதவியுடன் பாதுகாப்பாக வெளியேற முடிந்ததாகவும், அந்தச் சம்பவத்தில் தனது தொலைபேசி மற்றும் தனிப்பட்ட பொருட்களும் பறிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தற்போது சிகிச்சை பெற்று வரும் அந்த சிறைச்சாலை அதிகாரி, சம்பவம் நடைபெற்ற நேரத்தில் சிறைச்சாலைக்குள் முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலைமை நிலவியதாகவும், அதுவே உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதங்களுக்கு வழிவகுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக