யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகப் பணியாற்றி வந்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களை திருத்தந்தை 14ஆம் லியோ இன்று (29) அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளார்.
இந்த நியமனம், தற்போதைய யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் ஓய்வைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு யாழ்ப்பாண மறைமாவட்டத்தினரிடமும், இலங்கை கத்தோலிக்க சமூகத்தினரிடமும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டுள்ளது.
1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், தனது ஆரம்ப மற்றும் உயர்கல்வியை நிறைவு செய்த பின்னர், சமயப் பணியில் இணைந்து, 2000ஆம் ஆண்டு கொழும்பு மறைமாவட்டத்தின் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
அதன் பின்னர் பல ஆண்டுகளாக, கல்வி, இறையியல், மறைபணி மற்றும் நிர்வாகத் துறைகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, சிறந்த சேவையாற்றியுள்ளார். அவரது நிர்வாக அனுபவமும், ஆன்மீகத் தலைமையும் கத்தோலிக்க திருச்சபையில் குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது.
கல்வித் தகுதிகளிலும் சிறந்து விளங்கும் அவர், உரோமில் இறையியல் பட்டம் பெற்றதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம், கொழும்பில் கல்வியியல் டிப்ளோமா, மேலும் ஐக்கிய இராச்சியத்தில் கல்வியியலில் முதுகலைப் பட்டம் ஆகியவற்றையும் பெற்றுள்ளார். அதேபோல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி மற்றும் முதுகலைமாணி பட்டங்களையும் நிறைவு செய்துள்ளார்.
2020ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் திகதி, அப்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்ட அவர், அதே ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் திகதி ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
பின்னர், 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் திகதி மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் நியமிக்கப்பட்டு, அந்தப் பொறுப்பையும் திறம்பட மேற்கொண்டு வந்தார்.
தற்போது, யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அவர் நியமிக்கப்பட்டுள்ளமை, வட மாகாண கத்தோலிக்க மக்களின் ஆன்மீக வாழ்வில் புதிய அத்தியாயமாகக் கருதப்படுகிறது. அவரது அனுபவம், கல்வி அறிவு மற்றும் நீண்டகால மறைபணி, யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் வளர்ச்சிக்கும், சமய மற்றும் சமூக சேவைகளுக்கும் புதிய ஊக்கத்தை அளிக்கும் என கத்தோலிக்க சமூகத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
புதிய ஆயரின் பொறுப்பேற்பு தொடர்பான நிகழ்வுகள் மற்றும் திருப்பலி ஏற்பாடுகள் குறித்து யாழ்ப்பாண மறைமாவட்டம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக