வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்த புதிய விலைகள் இன்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பின்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 434 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 92 ஒக்டேன் பெற்றோல், இனி 414 ரூபாவிற்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
அதேபோல், ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 407 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் புதிய விலை 382 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சூப்பர் டீசல், 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மாதாந்திர எரிபொருள் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் இந்த விலை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள், இறக்குமதி செலவுகள் மற்றும் நாணய மாற்று விகிதம் போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விலைக் குறைப்பு தனியார் வாகன உரிமையாளர்கள், பொதுப் போக்குவரத்து துறை, வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் பொருட்களின் போக்குவரத்து செலவுகளில் ஓரளவு நிவாரணத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த விலைக் குறைப்பின் தாக்கம் அத்தியாவசிய பொருட்களின் சந்தை விலைகளில் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பது எதிர்வரும் நாட்களில் தெரியவரும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக