காரசாரமான உணவுகளை விரும்புபவர்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி ஒரு சிறந்த தேர்வாகும். வழக்கமாக செய்யும் சிக்கன் கிரேவியிலிருந்து மாறுபட்டு, மணமும் காரமும் நிறைந்த இந்த ரெசிபி சாப்பிடும் அனைவரையும் கவரும். மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு சாதம், சப்பாத்தி, பரோட்டா ஆகியவற்றுடன் சேர்த்து சுவைக்க மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த உணவை தயாரிக்க சிக்கன், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, மல்லி, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய், அன்னாசிப்பூ, பட்டை, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகிய பொருட்கள் தேவைப்படும்.
முதலில் மிளகு, மல்லி, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய், அன்னாசிப்பூ மற்றும் பட்டையை நன்றாக வறுத்து மணம் வரும் வரை சூடாக்கி, பின்னர் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளற வேண்டும்.
அடுத்து சுத்தம் செய்யப்பட்ட சிக்கனை சேர்த்து, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து வேக வைக்க வேண்டும். சிக்கன் நன்றாக வெந்த பிறகு அரைத்த மசாலா பொடியை சேர்த்து சில நிமிடங்கள் கிளறி, இறுதியாக பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும்.
மணக்கும் காரசாரமான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி தயார். காரம் விரும்பும் உணவுப் பிரியர்களுக்கு இந்த ரெசிபி நிச்சயம் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக