ஆபிரிக்க நாடுகளிலிருந்து கடல் வழியாக ஸ்பெயின் நாட்டை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரில், 2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புலம்பெயர்வோரின் நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் 'காமினாண்டோ ஃப்ரோன்டெராஸ்' அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஸ்பெயின் கடற்கரையை அடைய முயன்ற 1,317 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 142 பெண்களும், 129 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற 27 படகுகள் கடலின் நடுப்பகுதியில் முற்றிலும் காணாமல் போயுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கடல் வழிப் பயணத்தின் போது ஏற்பட்ட கடுமையான வானிலை, பாதுகாப்பற்ற படகுகள் மற்றும் நீண்ட தூரப் பயணங்கள் பல உயிர்களை காவு வாங்கியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய நாடுகளின் எல்லைக் கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், புலம்பெயர்ந்தோர் தற்போது மிகவும் ஆபத்தான மற்றும் நீண்ட கடல் பாதைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதுவே மரண எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் 3,090 பேர் ஸ்பெயினை அடைய முயற்சித்தபோது உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயிருந்தனர். தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த மனிதாபிமான நெருக்கடி, உலக நாடுகளின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளதுடன், புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச நடவடிக்கைகள் குறித்து புதிய கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக