இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூருவில், எபோலா (Ebola) வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவர் அவசரமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பெண்ணுக்கு உடலில் லேசான வலி (Body pain) இருப்பதாகத் தெரிவித்துள்ள போதிலும், அவரது தற்போதைய உடல்நிலை சீராக உள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அவரிடமிருந்து இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதற்கான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்கப் பெண் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து முதலில் இந்தியாவுக்கு வந்துள்ளார். பின்னர் குஜராத்தின் அகமதாபாத் நகரிலிருந்து உள்நாட்டு விமானம் மூலம் பெங்களூருவிற்குப் பயணம் செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து சர்வதேச, உள்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் எல்லை நுழைவு வாயில்களில் சுகாதார சோதனைகள் மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் உடனடியாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. அத்துடன், எபோலா பரிசோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான அவசர வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பினால் (WHO) சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக (PHEIC) எபோலா நோய் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை எவருக்கும் எபோலா பாதிப்பு பதிவாகவில்லை என இந்திய சுகாதார அமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவித்த அடுத்த நாளே, இந்தச் சந்தேகத்திற்குரிய நோயாளி கண்டறியப்பட்டுள்ளார்.
12 வருடங்களுக்குப் பின் ஆபத்து: ஒருவேளை இந்தப் பெண்ணுக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டால், கடந்த 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு தெற்காசிய நாடொன்றில் பதிவாகும் முதல் எபோலா நோயாளி இவராகவே இருப்பார்.
பயணக் கட்டுப்பாடு: ஆப்பிரிக்காவில் எபோலா பரவல் தீவிரமடைந்துள்ளதால் காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்திய அரசு ஏற்கனவே தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உச்சிமாநாடு ஒத்திவைப்பு: ஆப்பிரிக்காவில் நிலவும் இந்த மோசமான பொது சுகாதாரச் சிக்கல்களை முன்னிட்டு, இந்த வாரம் புதுடெல்லியில் நடைபெறவிருந்த உயர்மட்ட ‘இந்தியா - ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாடு’ (IAFS) தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மருந்துகள் இல்லாத 'புந்திபுக்யோ' எபோலா வைரஸ்:
உலக சுகாதார அமைப்பின் (WHO) தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, உலகளவில் சந்தேகிக்கப்படும் 900-க்கும் மேற்பட்ட நோயாளிகளில், 101 பேருக்கு ‘புந்திபுக்யோ’ (Bundibugyo) வகை எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விசேட வகைக் கொடிய வைரஸிற்கு எதிராகச் செயற்படக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ (Vaccines) அல்லது பிரத்தியேக மருந்துச் சிகிச்சைகளோ இதுவரை மருத்துவ உலகில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக