மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச அபிவிருத்திக் குழுவின் வருடாந்த மீளாய்வுக் கூட்டம் நேற்று (25.05.2026) செங்கலடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்பாக, பிரதேசத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சட்டவிரோத மதுபான (கசிப்பு) உற்பத்தியை உடனடியாக ஒழிக்கக் கோரி இளைஞர்கள் சிலரால் திடீர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு எதிராகப் பாதாதைகளை ஏந்தியவாறு பிரதேச செயலகத்திற்கு முன்பாகத் திரண்ட இளைஞர்கள், பின்னர் கூட்டம் நடைபெறவிருந்த மாநாட்டு மண்டபத்திற்குள்ளும் நுழைந்து அமைதியான முறையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மதுபான உற்பத்திகளைக் கட்டுப்படுத்தக் கோரும் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரிடம் அவர்கள் கையளித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் பின்வரும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்:
வைத்தியர் இ.சிறிநாத் (நாடாளுமன்ற உறுப்பினர் - இலங்கைத் தமிழரசுக் கட்சி)
ஞா.சிறிநேசன் (நாடாளுமன்ற உறுப்பினர்)
கே.தனபாலசுந்தரம் (செங்கலடி பிரதேச செயலாளர்)
ஏறாவூர்ப்பற்று மற்றும் ஏறாவூர் நகர சபைகளின் தவிசாளர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்.
நாடாளுமன்ற உறுப்பினரின் அதிரடிப் பணிப்புரை:
இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, இந்தச் சட்டவிரோத கசிப்பு உற்பத்திகளைத் தடுக்க விசேட பொலிஸ் குழுக்களை அமைத்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். மேலும், இது குறித்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கும் பொதுமக்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர் சுமுகமாக நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், கடந்த ஆண்டு (2025) ஒதுக்கப்பட்ட நிதிகள் மூலம் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன், நடப்பு ஆண்டிற்கான (2026) புதிய திட்டங்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக