நாட்டில் 2022ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்பட ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமாக உறுதியளித்துள்ளார்.
நேற்று காலை (22) நிந்தவூர் கலாசார மையத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அத்தகையதொரு சூழல் ஒருபோதும் உருவாகாது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, மத்திய கிழக்கில் போர் மூண்டாலோ அல்லது ஏதேனும் வெளிப்புற நெருக்கடிகள் ஏற்பட்டாலோ, அந்தச் சூழ்நிலைகளையும் வெற்றிகரமாகச் சமாளிக்கும் வலிமை தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது, இனவாதத்திற்கு இடமளிக்காமல் இருப்பது, ஊழல்வாதிகளைத் தண்டிப்பது, சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் ஒரு நாட்டை உருவாக்குவது மற்றும் அரசியல்வாதிகளின் வரம்பற்ற சலுகைகளைக் கட்டுப்படுத்துவது ஆகியவையே மக்கள் தங்களுக்கு வழங்கிய ஆட்சி ஆணை (Mandate) என்று தெரிவித்த அவர், இது தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே கணிசமான அளவு பணிகளைச் செய்து முடித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், அனைவருக்கும் சட்டம் சமமாகப் பயன்படுத்தப்படும் ஒரு நாட்டை உருவாக்கும் பொறுப்பு தனது அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்படாவிட்டால், அது வேறு எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் நிறைவேற்றப்படாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு விசேடமாக வலியுறுத்தினார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக