இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையில் தலையிடுவதாகக் குற்றம் சுமத்தி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் எதிர்க்கட்சிகள் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் முன்வைக்கப்பட்ட இந்த முறைப்பாட்டு ஆவணத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட 24 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். கடந்த மே முதலாம் திகதி நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் தினக் கூட்டத்தில், கடந்த கால அரசாங்க முக்கியஸ்தர்களுக்கு எப்போது தண்டனை வழங்கப்படும் என்பது குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்கள் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இத்தகைய பகிரங்கக் கூற்றுகள் உள்நாட்டுச் சட்டங்களை மட்டுமன்றி, சர்வதேச மனித உரிமைச் சட்டங்களையும் மீறும் செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. ஜனாதிபதியின் இந்தச் செயல் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைப்பதாகவும், அரசியல் பழிவாங்கல்களுக்கு வழிவகுப்பதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது உள்நாட்டு அரசியலில் மட்டுமன்றி, சர்வதேச மட்டத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக