யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இதுவரை நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத நிலையில், அங்கு வாழும் மக்களின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசாங்கத்தினால் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருளைக் கொண்டுசெல்லும் பணிகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, இரண்டு எரிபொருள் பவுஸர்களில் ஏற்றப்பட்ட எரிபொருள், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இறங்குதுறையிலிருந்து கடல் வழியாகக் பாரிய படகு மூலம் மிகவும் பாதுகாப்பான முறையில் நெடுந்தீவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
அங்கு கொண்டுசெல்லப்பட்ட எரிபொருள், புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வெற்றிகரமாக இறக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவந்த முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்க்களை எதிர்நோக்கி வந்தனர்.
நெடுந்தீவு மக்கள் எரிபொருளை பெற குறிகட்டுவான் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டது.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நெடுந்தீவின் அபிவிருத்தி மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, அங்கு முதன்முறையாக நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக