நில்வளவை மற்றும் ஜின் ஆறுகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு நிலைமை தொடர்ந்து நீடித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் நாட்டில் மழைவீழ்ச்சி சற்று குறைவடைந்திருந்தாலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகளுக்கான வெள்ள அபாயம் தொடர்ந்தும் காணப்படுகிறது.
நில்வளவை ஆறு: அக்குரஸ்ஸ மற்றும் அதனை அண்டிய கீழ்மட்டப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை நீடிக்கிறது.
ஜின் ஆறு: பத்தேகம மற்றும் அதனைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நிலைமை தொடர்கிறது.
களு கங்கை (மில்லக்கந்த): மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகின்ற போதிலும், மில்லக்கந்த மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர்மட்டம் சிறிய வெள்ள மட்டத்திற்கு அருகிலேயே காணப்படுகிறது.
மகாவலி ஆறு: இதன் மேல் பகுதிகளில் அபாயகரமான நீர்மட்ட உயர்வு எதுவும் பதிவாகவில்லை என்பதுடன், நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
கடந்த மணிநேரங்களில் நில்வளவை கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 75 முதல் 100 மில்லிமீற்றர் வரையும், மகாவலி ஆற்றின் மேல் பகுதிகளில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரையும், மகா ஓயாவின் மேல் பகுதிகளில் சுமார் 50 மில்லிமீற்றர் வரையும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்: ஈர வலய ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்வாகவே உள்ளதால், எதிர்வரும் மணிநேரங்களில் பெய்யக்கூடிய பலத்த மழையால் நீர்மட்டம் வேகமாக உயரக்கூடும்.
அத்துடன், நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படும் அளவுகளும் மாற்றமடையக்கூடும் என்பதால், ஆறுகளுக்கு அருகிலுள்ள தாழ்நிலப் பகுதி மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக