நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவுக்கு எதிரான, ஒருகொடவத்தை, பேஸ்லைன் வீதியில் கார் விபத்து வழக்கு 2027 ஜனவரி மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவுக்கு எதிராக கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதியன்று லசந்த அபேவர்தன என்பவரைக் காரை ஓட்டிச் செல்லும்போது விபத்துக்குள்ளாக்கித் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணைகள் இன்று இடம்பெறவிருந்தன.
எனினும், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிக்கு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குக் கோப்பு உள்ளதால், இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாதுள்ளது எனக் கூறி வழக்கு விசாரணைக்கு மற்றொரு தினத்தைக் கோரினார்.
குறிப்பாக, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் விசாரணை செய்வதற்காகவே இந்தத் திகதி கோரப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த விவகாரத்தின் தரப்புச் சட்டத்தரணி, தனது சேவை பெறுநருக்கு ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 3ஆம் வாரங்களில் நாடாளுமன்றத்திற்குச் செல்லவேண்டிய தேவையுள்ளதால், அந்தத் திகதிகளைத் தவிர்ந்த வேறு ஒரு தினத்தை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இரு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களைக் பரிசீலித்த நீதவான், எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி விவகாரத்தின் சாட்சி விசாரணைகளுக்காக வழக்கு மீண்டும் அழைக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக