ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று பெரும் சாதனை படைத்துள்ளார்.
மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் மாணவன் சு. சபின், புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப் பெற்று இந்தச் சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
தமிழ்மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடத்தைப் பிடித்துள்ளமை, யாழ்ப்பாணம் கல்விச் சமூகத்திலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறந்த பெறுபேற்றை பெற்ற சு. சபினின் இந்த சாதனை, அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமன்றி, அவர் கல்வி கற்கும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, சிங்கள மொழி மூலம் அதிகூடிய புள்ளியாக 193 புள்ளிகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெறுபேறு குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை என்பது மாணவர்களின் ஆரம்பக் கல்வி நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த பரீட்சையாகக் கருதப்படும் நிலையில், தேசிய ரீதியில் யாழ்ப்பாண மாணவன் ஒருவர் முதலிடம் பெற்றிருப்பது வடக்கு மாகாண கல்விச் சமூகத்திற்கும் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.
சு. சபினின் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்திற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவரது கல்விப் பயணம் எதிர்காலத்திலும் சிறப்பாக அமைய வேண்டும் என பலரும் வாழ்த்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக