அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தின் ஊடாக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்த மசோதாக்களுக்கு, அவை அரசியலமைப்புக்கு இணக்கமானவை என சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, அரசியலமைப்பு, நீதிமன்றங்கள் கட்டமைப்புச் சட்டம் மற்றும் அரசாங்க மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வூதியக் கட்டளைச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த திருத்தங்களின் மூலம் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆகவும், மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆகவும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நீதித்துறை கட்டமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குப் பதிலாக இரண்டு மேல்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், மூன்று வணிக மேல்நீதிமன்றங்கள் ஐந்தாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் மேல்நீதிமன்றங்களின் எண்ணிக்கையும் எட்டிலிருந்து பதினொன்றாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு மேலாக, முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன், கொழும்பு மேல்நீதிமன்றத்தின் குறிப்பிட்ட நீதிமன்ற அறைகளில் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகள் தினசரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னர் இவ்வகை வழக்குகள் ஒரே நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்பட்ட நிலையில், தற்போது நீதித்துறை வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெய்யந்தர, அங்குணுகொலபெலஸ்ஸ, பிபில மற்றும் கல்கமுவ உள்ளிட்ட பல நீதவான் நீதிமன்றங்களுக்கு மாவட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. உத்தியோகத்தர் பற்றாக்குறை காரணமாக செயலிழந்திருந்த இரத்தினபுரி, கம்பஹா, அனுராதபுரம் மற்றும் அம்பாறை நீதிமன்றங்கள் மீண்டும் செயற்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், புத்தளம், வெல்லவாய, ஹட்டன் மற்றும் வெலிசர பகுதிகளில் புதிய நீதிமன்றங்களும் நிறுவப்பட்டுள்ளன.
அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குத் தேவையான புதிய உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும், தேவையான இயந்திர உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக