திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள சீனக்குடா விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை துறைமுகப் பகுதிக்கு மேற்கொண்ட ஆய்வு விஜயத்தின் போது அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார். இதன்போது, அவரது தலைமையிலான உயர்மட்டக் குழு முதன்முறையாக சீனக்குடா விமான நிலையத்திற்குச் சென்று, அங்கு அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடியது.
விமான நிலையத்தின் தற்போதைய வசதிகள், கட்டமைப்பு மற்றும் எதிர்கால மேம்பாட்டு தேவைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் விமான நிலையத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், திருகோணமலை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான தற்போது பயன்பாட்டில் இல்லாத சிலோன் ஜெட்டி, ஓல்ட் ஜெட்டி, டவுன் ஜெட்டி, 1947 ஜெட்டி, மன்கோ ஜெட்டி மற்றும் பொறியியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மவுத்தோ ஜெட்டி உள்ளிட்ட பழமையான துறைமுக முனையங்களின் தற்போதைய நிலையும் அமைச்சர் தலைமையிலான குழுவினரால் நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்யப்பட்டது.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில், திருகோணமலையை சுற்றுலா மற்றும் போக்குவரத்து துறைகளில் முக்கிய மையமாக உருவாக்கும் நோக்கில் தேவையான அபிவிருத்தித் திட்டங்கள் கட்டப்படியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக