மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையில் பயணம் செய்யும் விமானப் பயணிகள் தங்களது பயணத் திட்டங்களில் திடீர் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் Smartraveller இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர் சூழ்நிலை காரணமாக சில நாடுகளின் வான்வெளி குறுகிய முன்னறிவிப்பில் மூடப்படக்கூடும். இதன் காரணமாக விமான நிறுவனங்கள் சில சேவைகளை மட்டுப்படுத்தவோ, மாற்று விமானப் பாதைகளை பயன்படுத்தவோ அல்லது குறிப்பிட்ட விமானங்களை இரத்து செய்யவோ நேரிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக டுபாய், டோஹா மற்றும் அபுதாபி உள்ளிட்ட மத்திய கிழக்கு விமான நிலையங்கள் வழியாக அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையில் பயணம் செய்பவர்களுக்கு இந்த எச்சரிக்கை மிகவும் முக்கியமானதாகும்.
வான்வெளி கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் விமானங்கள் தாமதமடைவது, பயண நேரம் அதிகரிப்பது மற்றும் இணைப்பு விமானங்களைத் தவறவிடும் அபாயம் காணப்படுவதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான அனைத்து விமானச் சேவைகளும் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், கட்டார் எயார்வேஸ் நிறுவனம் 2026 செப்டம்பர் 15 ஆம் தேதி வரை புதுப்பிக்கப்பட்ட விமான அட்டவணையின் அடிப்படையில் தனது சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும், பாதுகாப்பு காரணங்களால் குவைத்திற்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கோ அல்லது அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கோ பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளவர்கள், விமான நிலையத்திற்குச் செல்லும் முன் தங்களது விமானத்தின் தற்போதைய நிலையை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களின் ஊடாக கட்டாயம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக