இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், போதைப்பொருள் ஒழிப்புக்காக அரசாங்கம் எடுத்துள்ள 16 முக்கிய தீர்மானங்களில் இருந்து எந்தவொரு சவாலுக்கும் அஞ்சாமல் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்தார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களை வெறுமனே குற்றவாளிகளாகக் கருதி கைது செய்து சிறையில் அடைப்பது மட்டுமே தீர்வாகாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், அவர்களை சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டியவர்கள் எனக் கருதி செயல்படுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு மாறாக, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக சட்டத்தின் முழு அதிகாரமும் பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். பிராந்திய பொலிஸ் நிலையங்கள் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் போதிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், வேறு பொலிஸ் பிரிவுகள் அல்லது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்தி சோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், நாடு முழுவதும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், 14,125 மக்கள் பாதுகாப்பு குழுக்களின் ஊடாக தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம் செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்கால தலைமுறையை போதைப்பொருளிலிருந்து பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக