2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரராக பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டு முறை 'கோல்டன் பூட்' (Golden Boot) விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இத்தொடரில் எட்டு போட்டிகளில் விளையாடிய எம்பாப்பே, மொத்தமாக 10 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி இந்த விருதை கைப்பற்றியுள்ளார்.
இதற்கு முன்னர் 2022 கட்டார் உலகக் கிண்ண தொடரிலும் எட்டு கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருதை வென்றிருந்த எம்பாப்பே, தொடர்ந்து இரண்டு உலகக் கிண்ண தொடர்களில் இந்த விருதை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளார்.
மேலும், 1970 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியின் கெர்ட் முல்லருக்குப் பிறகு, ஒரே உலகக் கிண்ணத் தொடரில் 10 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் 27 வயதான எம்பாப்பே பெற்றுள்ளார்.
உலகக் கிண்ண வரலாற்றில் ஒரே தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில், பிரான்ஸின் ஜஸ்ட் ஃபோன்டைன் (1958 – 13 கோல்கள்) மற்றும் ஹங்கேரியின் சாண்டோர் கோக்சிஸ் (1954 – 11 கோல்கள்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் எம்பாப்பே இடம்பெற்றுள்ளார்.
அத்துடன், உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த ஆண்கள் வீரர்களின் பட்டியலிலும் எம்பாப்பே 22 கோல்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் 21 கோல்கள் பெற்றிருந்த லியோனல் மெஸ்ஸியையும் அவர் முந்தியுள்ளார்.
மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பிரான்ஸ் அணி இங்கிலாந்திடம் 6-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து நான்காவது இடத்தைப் பெற்றபோதிலும், அந்தப் போட்டியில் எம்பாப்பே இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் தனது கோல் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தி கோல்டன் பூட் விருதை உறுதிப்படுத்தினார்.
தொடரின் ஆரம்ப சுற்றுகளில் செனகல் மற்றும் ஈராக் அணிகளுக்கு எதிராக தலா இரண்டு கோல்களையும், 32 அணிகள் சுற்றில் சுவீடனுக்கு எதிராக ஒரு கோலையும், 16 அணிகள் சுற்றில் பராகுவே அணிக்கு எதிராக வெற்றிகரமான பெனால்டி கோலையும், காலிறுதியில் மொராக்கோவுக்கு எதிராக மேலும் ஒரு கோலையும் எம்பாப்பே பதிவு செய்திருந்தார்.
இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி ஸ்பெயினிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த நிலையில், லியோனல் மெஸ்ஸி கோல் எதையும் பதிவு செய்ய முடியாமல் எட்டு கோல்களுடன் தொடரை நிறைவு செய்தார். இங்கிலாந்தின் ஜூட் பெலிங்ஹாம் மற்றும் நார்வேயின் எர்லிங் ஹாலாண்ட் தலா ஏழு கோல்களையும், பிரான்ஸின் உஸ்மான் டெம்பேலே மற்றும் இங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி கேன் தலா ஆறு கோல்களையும் அடித்து தொடரை நிறைவு செய்தனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக