இலங்கை பெண்கள் சாரணர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த 'ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருது வழங்கும் விழா' நேற்று அலரி மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகப் பங்கேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, விருது பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், "உண்மையான தலைமைத்துவம் என்பது பதவி அல்லது அதிகாரத்தால் அளவிடப்படுவதில்லை. பொறுப்புணர்வுடனும், பரஸ்பர அக்கறையுடனும், பிறரின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதிலேயே அதன் உண்மையான அர்த்தம் உள்ளது" என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வில், சிறுமிகளின் ஒழுக்கம், நேர்மை, தலைமைத்துவ திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை பாராட்டும் வகையில் 338 ஜனாதிபதி விருதுகளும், 12 பிரதமர் விருதுகளும் வழங்கப்பட்டன. மொத்தம் 350 விருதுகள் வழங்கப்பட்ட இந்த விழாவில், பிரதமர் நேரடியாக விருதுகளை வழங்கி மாணவிகளை வாழ்த்தினார்.
மேலும் உரையாற்றிய அவர், பெண்கள் சாரணர் இயக்கத்தின் மிகப்பெரிய பலம் அனைத்து தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதாகும் என்றும், இன்றைய இளம் பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான வாய்ப்புகளையும் ஆதரவையும் உறுதிப்படுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பொருளாதார வளர்ச்சி மட்டுமன்றி, ஒழுக்கநெறி மற்றும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட குடிமக்களை உருவாக்குவதும் முக்கியமானது என்றும், அந்த நோக்கில் பெண்கள் சாரணர் இயக்கம் ஆற்றிவரும் சேவை பாராட்டத்தக்கது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
1917 ஆம் ஆண்டு கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் தொடங்கப்பட்ட இலங்கை பெண்கள் சாரணர் இயக்கம் தற்போது ஏழு பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் செயற்பட்டு வருகிறது. இவ்வியக்கத்தில் வழங்கப்படும் 'ஜனாதிபதி விருது' ஒரு பெண் சாரணர் பெறக்கூடிய உயரிய அங்கீகாரமாகக் கருதப்படுவதுடன், பல்வேறு சவால்கள் மற்றும் தகுதித் தேர்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்நிகழ்வில் இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தின் தலைவி ஸ்வர்ணிகா பிடிகல, முதன்மை ஆணையாளர் கலாநிதி குஷாந்தா ஹேரத், அதிகாரிகள், விருது பெற்ற சாரணர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக