இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அருகிலுள்ள சாந்தினிபாகன் பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த மாணவி 10ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்துள்ளார். பாடசாலை முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, 24 வயதுடைய சமீர் தாஸ் என்ற இளைஞர் அவரை வழிமறித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் ஆத்திரமடைந்த சந்தேகநபர் தன்னிடம் வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்து, வயிறு மற்றும் கைகளில் பலமுறை தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுமையாக காயமடைந்த மாணவி வீதியிலேயே இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில், அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்ற சமீர் தாஸை அப்பகுதி மக்கள் விரட்டிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவர் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், தோம்ஜூர் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தவராகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆரம்ப விசாரணையில், தனது காதலை மாணவி ஏற்க மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தக் கொலையை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்தின் பின்னணி, முன்கூட்டிய திட்டமிடல் மற்றும் இருவருக்கும் இடையே ஏற்கனவே தொடர்பு இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெண்களின் பாதுகாப்பு, ஒருதலைக்காதல் காரணமாக அதிகரித்து வரும் வன்முறைச் செயல்கள் மற்றும் இளைஞர்களின் மனநல விழிப்புணர்வின் அவசியம் குறித்து சமூகத்தில் மீண்டும் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக