தமிழ் பேசும் ஆறு அரசியல் தரப்புகள் ஒன்றிணைந்திருப்பது தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்திற்கு சாதகமான முன்னேற்றமாக அமைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (16) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டே இந்த ஒற்றுமை முயற்சி முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டார். சிங்கள அரசியல் கட்சிகளிடமிருந்து தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு போதிய தீர்வுகள் கிடைக்கவில்லை என்ற எண்ணமும் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் எதிர்கால நலன்களை முன்னிறுத்தியே இந்தக் கூட்டணியை உருவாக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அரசியல் ரீதியாக முக்கியமான முன்னேற்றமாக கருதப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.
மேலும், தற்போதைய அரசின் செயற்பாடுகள் தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடையே திருப்தியற்ற நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, தனியார் மக்களின் நிலங்கள் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதும், சில பகுதிகளில் அந்த நிலங்களில் மேற்கொள்ளப்படும் விவசாய நடவடிக்கைகளின் வருமானம் இராணுவத்தினரால் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்தச் சூழ்நிலைகளில் தமிழ் மக்களுக்கு சம உரிமைகள் மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் போதுமான அளவில் முன்னெடுக்கப்படவில்லை என்றும், தற்போதைய ஆட்சியின் கீழ் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேறவில்லை என்றும் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக