கண்டி பேராதனை போதனா வைத்தியசாலையில் இடுப்புப் பகுதியில் இணைந்த நிலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாகப் பிரித்து, இலங்கை மருத்துவர்கள் உலக மருத்துவ வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.
இந்த அரிய சத்திரசிகிச்சையை பேராதனை போதனா வைத்தியசாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை மற்றும் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த நிபுணர் மருத்துவக் குழுவினர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
சத்திரசிகிச்சையின் போது, ஒரு குழந்தைக்கு இருந்த இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை பிரித்தெடுத்து மற்றொரு குழந்தைக்கு வெற்றிகரமாக மாற்றியமைக்கும் சிறுநீரக மாற்று சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறான சத்திரசிகிச்சை உலகிலேயே முதன்முறையாக வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக சிறுவர் சத்திரசிகிச்சை நிபுணரும், பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்தியர் மாதுல ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மாவனெல்ல பகுதியைச் சேர்ந்த தாயொருவருக்கு 2021 ஆம் ஆண்டு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் இந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, உடல்நிலை சீரடைந்த பின்னர் கடந்த மாதம் 10 ஆம் திகதி குழந்தைகளைப் பிரிக்கும் பிரதான சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நீடித்த இந்த சத்திரசிகிச்சையின் போது குழந்தைகள் முழுமையான மயக்க நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இதயம், நுரையீரல், இரத்த ஓட்டம் மற்றும் மூளையின் செயற்பாடுகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டதே சிகிச்சை வெற்றியடைய முக்கிய காரணமாக அமைந்ததாக மயக்க மருந்து நிபுணர் வைத்தியர் அஷானி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இடுப்புப் பகுதியில் அசாதாரண உடல் அமைப்புடன், கால்கள் 90 பாகை கோணத்தில் அமைந்திருந்ததால், நரம்புகள் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் குழந்தைகளைப் பிரிப்பது மருத்துவக் குழுவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாக எலும்பியல் சிகிச்சை நிபுணர் வைத்தியர் அகலங்க ஜயசிங்க விளக்கியுள்ளார்.
குழந்தைகளின் உடல் எடை சத்திரசிகிச்சைக்கு ஏற்ற நிலையை அடையும் வரை சுமார் ஐந்து ஆண்டுகள் காத்திருந்து இந்த அறுவை சிகிச்சை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் 15 விசேட வைத்தியர்கள் உட்பட சுமார் 30 பேர் கொண்ட மருத்துவக் குழு பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்திரசிகிச்சைக்குப் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்த இரு குழந்தைகளும் தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் அவர்களுக்கு மேலும் சில சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மருத்துவக் குழு குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக