சுவிட்சர்லாந்தின் மொத்த மக்கள் தொகையை ஒரு கோடி (10 மில்லியன்) என்ற உச்சவரம்பிற்குள் கட்டுப்படுத்தும் திட்டத்தை அந்நாட்டு மக்கள் வாக்கெடுப்பின் மூலம் நிராகரித்துள்ளனர். இந்த முடிவு, குடியேற்றம் மற்றும் மக்கள் தொகை வளர்ச்சி தொடர்பான தேசிய விவாதங்களில் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட மக்கள் வாக்கெடுப்பில் சுமார் 60 சதவீத மக்கள் பங்கேற்று தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். வாக்களித்தவர்களில் 55 சதவீதம் பேர் மக்கள் தொகை உச்சவரம்பு நிர்ணயிக்கும் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ள நிலையில், 45 சதவீதம் பேர் மட்டுமே அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த முன்மொழிவை சுவிட்சர்லாந்தின் வலதுசாரி அரசியல் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி (SVP) முன்னெடுத்திருந்தது. நாட்டின் வீட்டு வசதி, பொது போக்குவரத்து, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீது அதிகரித்து வரும் அழுத்தங்களை குறைப்பதற்காக மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என அக்கட்சி வாதிட்டது.
எனினும், இந்த திட்டம் சமூக பிரச்சினைகளுக்கான காரணமாக குடியேறிகள் மற்றும் தஞ்சம் கோருவோரை குறிவைக்கும் நடவடிக்கையாக மாறக்கூடும் என எதிர்க்கட்சிகள் மற்றும் மனித உரிமை ஆதரவாளர்கள் விமர்சித்துள்ளனர். மேலும், சுவிஸ் அரசாங்கமும் பல முக்கிய அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால், சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையேயான சுதந்திர நடமாட்ட ஒப்பந்தம் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும் எழுந்திருந்தது. குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் உள்ள பொருளாதார மற்றும் தொழிலாளர் தொடர்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.
சுற்றுலா, சுகாதாரம் மற்றும் சேவைத் துறைகள் உள்ளிட்ட பல முக்கிய துறைகள் வெளிநாட்டு தொழிலாளர்களின் பங்களிப்பை பெரிதும் நம்பியுள்ள நிலையில், மக்கள் தொகை கட்டுப்பாடு மனித வள பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்ற கவலையும் வாக்காளர்களிடையே காணப்பட்டது.
2002 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை சுமார் 7.3 மில்லியனாக இருந்த நிலையில், தற்போது அது 9.1 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதில் சுமார் 27 சதவீத மக்கள் சுவிஸ் குடியுரிமை பெறாதவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாக்கெடுப்பு முடிவு, குடியேற்றம் மற்றும் மக்கள் தொகை வளர்ச்சி தொடர்பான கொள்கைகளில் சுவிட்சர்லாந்து மக்கள் சமநிலையான அணுகுமுறையை விரும்புகின்றனர் என்பதைக் காட்டுவதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக