அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அமைதி மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் உலகளாவிய ரீதியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச தரப்புகள் இந்த முன்னேற்றத்தை பாராட்டியுள்ளதுடன், இது பிராந்திய நிலைத்தன்மைக்கும் உலக அமைதிக்கும் சாதகமானதாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
ஈரான் மீதான பொருளாதார தடைகளை தளர்த்த அல்லது நீக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு தாங்கள் தயாராக இருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன. இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை குறைக்கும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே உருவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கட்டார் பிரதமர் வரவேற்றுள்ளார். அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு தனது முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்ற நிலையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர முயற்சிகளில் கட்டார் முக்கிய பங்காற்றியதாகவும், சமரச முயற்சிகளில் முன்னிலை வகித்த நாடுகளில் ஒன்றாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஒப்பந்தம் உடனடி மற்றும் நிரந்தர போர்நிறுத்தத்திற்கு வழிவகுப்பதோடு, சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், எதிர்கால பேச்சுவார்த்தைகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பிற்கும் இது புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என மதிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், இந்த அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு உதவிய நாடுகளாக பாகிஸ்தான், கட்டார், எகிப்து, சவூதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட பல பிராந்திய நாடுகளின் பங்களிப்பை ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பாராட்டியுள்ளார். மேலும், பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக அந்த நாடுகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக