டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் போதிய வெளிச்சமின்மை (Bad Light) காரணமாக ஆட்டம் அடிக்கடி பாதிக்கப்படுவதைத் தடுக்க, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசி-யின் வருடாந்திர கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த அதிரடி முடிவுகள் அனைத்தும் அக்டோபர் 1, 2026 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளன.
ஐசிசி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் தொகுப்பு இதோ:
பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் வெளிச்சம் குறையும் போது அன்றைய நாள் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்படும். இதனால் ஆட்ட நேரம் வீணாவதைத் தடுக்க புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது:
பந்து மாற்றம்: ஒரு நாளில் வீசப்பட வேண்டிய 90 ஓவர்களில், உதாரணத்திற்கு 75 ஓவர்கள் சிவப்பு பந்தில் (Red Ball) வீசப்பட்டு, மீதமுள்ள 15 ஓவர்கள் வெளிச்சக் குறைவால் பாதிக்கப்பட்டால், அங்கு விளக்குகளின் (Floodlights) வெளிச்சத்தில் பிங்க் நிற பந்தைப் (Pink Ball) பயன்படுத்தி மீதமுள்ள ஓவர்களை விளையாடி முடிக்கலாம்.
முன்கூட்டிய ஒப்பந்தம்: இந்த விதிமுறையைப் பயன்படுத்த ஒரு டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட இரு அணிகளின் முன்கூட்டிய ஒப்புதல் மற்றும் ஒப்பந்தம் அவசியமாகும்.
டி20 கிரிக்கெட்டில் உள்ள வியூக இடைவேளை (Strategic Timeout) முறையைப் போல, இனி டெஸ்ட் போட்டிகளிலும் பயிற்சியாளர்கள் ஆலோசனைகளை வழங்கலாம்.
அதிகாரப்பூர்வ டிரிங்க்ஸ் பிரேக்கின் (Drinks Break) போது, அணியின் தலைமைப் பயிற்சியாளர் அல்லது அவர்களால் பரிந்துரைக்கப்படும் நபர் நேரடியாக மைதானத்திற்குள் சென்று வீரர்களுடன் வியூகங்களை வகுக்க ஐசிசி அனுமதி அளித்துள்ளது.
பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு முறை (Bowling Action) விதிகளுக்கு உட்பட்டதா அல்லது பந்தை எறிகிறார்களா (Chucking) என்பதை ஆராய நடுவர்களுக்கு கூடுதல் தொழில்நுட்ப உதவி வழங்கப்பட்டுள்ளது.
நடுவர்கள் இனி ஹாக்-ஐ (Hawk-Eye) தொழில்நுட்பத்தின் தரவுகளைப் (Data) பயன்படுத்தி, சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு முறைகளை மிக எளிதாகவும் துல்லியமாகவும் கண்டறிய முடியும்.
டி20 போட்டிகளை மேலும் விறுவிறுப்பாக்கவும், நேர விரயத்தைத் தவிர்க்கவும் சில முக்கிய விதிகள் மாற்றப்பட்டுள்ளன:
லெக்-சைடு ஒயிடு (Leg-side Wide): டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன் நகர்ந்து சென்று அடிக்கும் போது லெக்-சைடில் விழும் பந்துகளுக்கான ஒயிடு விதிமுறை இனி நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.
கட்டாய இடைவேளை: டி20 போட்டிகளில் இனி 15 நிமிட இடைவேளை (Innings Break) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விரைவான வருகை: முந்தைய பேட்டர் ஆட்டமிழந்தவுடன், அடுத்த பேட்டர்கள் எவ்வித தாமதமும் இன்றி உடனடியாகக் களமிறங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டின் விறுவிறுப்பைக் கூட்டவும், இயற்கை மற்றும் காலநிலையால் போட்டிகள் கைவிடப்படுவதைத் தடுக்கவும் ஐசிசி மேற்கொண்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக