BREAKING

வீடு வாடகைக்கு எடுப்பது போல் நாடகம்

வீடு வாடகைக்கு எடுப்பது போல் நாடகம்

கொழும்பு - மாளிகாவத்தை தொடருந்து வீட்டுத் தொகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற பணியாளர் மற்றும் அவரது மனைவியை மிகவும் சூட்சுமமான முறையில் மயக்கமடையச் செய்து, அவர்களிடம் இருந்த நகைகளைக் கொள்ளையடித்த துணிகரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட தம்பதியிடமிருந்து 12 இலட்சம் ரூபாவாக்கும் அதிக மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிய கும்பலைத் தேடி, தெமட்டகொட பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.


வாடகைக்கு வீட்டினை பெற்றுக்கொள்வது போன்று நடித்து, 40 வயதான பெண் உள்ளிட்ட மூவர் அடங்கிய கொள்ளைக் கும்பலே இந்தத் திருட்டை அரங்கேற்றியுள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, இந்த வீட்டுத் தொகுதிக்கு வந்த அந்தப் பெண், தம்பதியரின் வீட்டிற்கு மேல் மாடியிலுள்ள வீட்டை வாடகைக்கு பெறப் போவதாகக் கூறியுள்ளார். பின்னர் அவர்களிடம் தண்ணீர் குடித்துவிட்டு, மிகச் சுமுகமாகப் பேசி பழகியுள்ளார்.


நேற்று முன்தினம் மீண்டும் அந்த வீட்டிற்கு வந்த சந்தேக நபரான பெண், வீட்டின் உரிமையாளரும் தரகரும் வரும் வரை காத்திருக்க வேண்டும் எனக் கூறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது கணவன் எனக் கூறி ஒருவரும், பின்னர் தரகர் மற்றும் ஒரு இளைஞனும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.


வீட்டிற்குள் நுழைந்த கும்பல், திடீரென அந்த வயோதிப தம்பதியை ஏதோ ஒரு வழியில் மயக்கமடையச் செய்துள்ளது. அவர்கள் சுயநினைவை இழந்ததைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்த 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிகப் பெறுமதியான தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.


கொள்ளையர்கள் தாங்கள் மாட்டிவிடக் கூடாது என்பதற்காக, மிகவும் சூட்சுமான முறையில் அந்த வீட்டின் முன் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தெமட்டகொட பொலிஸார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளின் உதவியுடன் சந்தேகநபர்களைக் கைது செய்ய மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். உங்களைச் சுற்றி அறிமுகமில்லாத நபர்கள் வாடகைக்கு வீடு கேட்பது போல் விசித்திரமாக நடந்துகொண்டால் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"