இலங்கையின் பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல பகுதியில், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ஒன்பது வளைவு பாலத்தை பார்வையிட வரும் காதல் ஜோடிகளை குறிவைத்து அச்சுறுத்தி கொள்ளைச் செயல்களில் ஈடுபட்ட மர்ம கும்பல் ஒன்றை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்த கும்பல், தங்களை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் என போலியாக அடையாளப்படுத்தி, காதலர்களை பயமுறுத்தி அவர்களிடமிருந்து பணம், தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளை பறித்துக் கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து மொத்தமாக 6300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அதேபோல், பல லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் கொள்ளையிட்ட சுமார் 4 இலட்சத்து 82 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை பதுளை நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், திருடப்பட்ட கைத்தொலைபேசிகளை ரிதிமாலியத்த மற்றும் பெத்தியாகொட பகுதிகளில் உள்ள நபர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். அந்த திருட்டுப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கும்பலின் முக்கிய நபராக ஹாலி எல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு முன்பே பல கடுமையான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாகவும், கதிர்காமம் பகுதியில் வங்கி கொள்ளை மற்றும் வீடு உடைப்பு சம்பவங்களுடன் தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 2025 ஆம் ஆண்டு ஒரு காதல் ஜோடியை அச்சுறுத்தி, இளம் யுவதியை காடுகளுக்குள் இழுத்துச் சென்று பாலியல் சீண்டல் செய்த சம்பவத்துடனும் இந்த நபருக்கு தொடர்பு இருக்கலாம் என விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளது.
எல்ல பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த பொலிஸார் சந்தேகத்திற்கிடமான ஒருவரை சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 4125 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் அடகு சீட்டுகள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், மற்றொரு 26 வயது இளைஞர் தெமோதர பகுதியில் 2175 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.
பொலிஸாரின் தகவலின்படி, இந்த சந்தேகநபர்கள் போதைப்பொருள் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் என கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக