பிரித்தானியா, கனடா உள்ளிட்ட 6 நாடுகள் இணைந்து ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள புதிய பிரேரணை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், ஐக்கிய இராச்சியம், கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கை தொடர்பான ஒரு புதிய தீர்மான வரைபை சமர்ப்பித்துள்ளன.
சமர்ப்பிக்கப்ட்டுள்ள தீர்மான வரைபில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்தத் தீர்மானம், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
2024 செப்டம்பர், நவம்பர், 2025 மே மாதங்களில் நடைபெற்ற ஜனாதிபதி, பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களைத் இந்த தீர்மானம் வரவேற்றுள்ளது.
அத்துடன், ஊழல் மற்றும் பொருளாதார முறைகேடுகளுக்குப் பொறுப்புக்கூற அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அது அங்கீகரித்துள்ளது.
அனைத்துத் தரப்பினராலும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உட்பட, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு முழுமையான பொறுப்புக்கூறல் அவசியம் என்று தீர்மானம் வலியுறுத்துகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைத் தீர்மானம் கவனத்தில் கொள்கிறது. எனினும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இச்சட்டத்தின் கீழ் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதை அது கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது.
எனவே, இச்சட்டத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தி, அதனை நீக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்துகிறது.
இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பான பல வழக்கு விசாரணைகள் தீர்க்கப்படாமல் இருப்பது குறித்து தீர்மானத்தில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளை சர்வதேச தரங்களுக்கு இணங்க அகழ்வதற்குத் தேவையான நிதி, மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப வளங்களைப் பெறுவதற்கு சர்வதேச உதவியை நாட வேண்டும் என்றும் இலங்கை அரசை இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.
பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்த்துப் போராடுவதன் மூலம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தீர்மானம் வலியுறுத்துகிறது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான முக்கிய வழக்குகளில் மீண்டும் விசாரணைகளைத் தொடங்குவதையும், சுதந்திரமான சட்டவாளர் அலுவலகத்தை நிறுவுவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளைத் தீர்மானம் வரவேற்கிறது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தின் செயல்பாடுகளை மேலும் நீட்டிக்கவும், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்து வாய்மொழி மற்றும் எழுத்துபூர்வ அறிக்கைகளை எதிர்கால அமர்வுகளில் சமர்ப்பிக்கவும் இந்தத் தீர்மானம் கோருகிறது.