பிரபல Rap பாடகர் கைது

சில நாட்களுக்கு முன்னர் போலி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பிரபல Rap பாடகர் மாதவ பிரசாத் என்கிற மதுவா மீண்டும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபருடன் 3 ஜெலக் நைட் குச்சிகள், 5 டெட்டனேட்டர்கள் மற்றும் 3.500 கிலோகிராம் அம்மோனியா நைட்ரேட் ஆகியவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரான Rap பாடகர் ஒகஸ்ட் 25 ஆம் திகதி கஹதுடுவ பகுதியில் போலி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டு, கெஸ்பேவ நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சந்தேக நபரான Rap பாடகர் வசிக்கும் பிட்டிபன கலஹேன பகுதியில் உள்ள மற்றொரு வீட்டின் பின்னால் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கஹதுடுவ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு கொட்டவில பொலிஸாரிடமிருந்து துப்பாக்கியை திருடியதற்காக மன்னார் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள், தனக்கு வெடிபொருட்களை கொடுத்ததாக சந்தேக நபர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் கான்ஸ்டபிள் சில வெடிபொருட்களை வேறொரு Rap பாடகருக்கு கொடுத்ததாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அந்தப் பாடகரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
26 வயதான சந்தேக நபர் வெடிபொருட்களுடன் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.