இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது முக்கியமானது – ஹபரணை – வேயாங்கொட மின் பரிமாற்றத் திட்ட ஆரம்ப நிகழ்வில் ஜப்பானிய தூதுவர்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது மிகவும் முக்கியமானது எனவும் ஊழலை ஒழிப்பது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, வணிகச் சூழலை மேம்படுத்துவது மற்றும் தெளிவான தொழில்துறை மேம்பாட்டுக் கொள்கைகளை உருவாக்குவது ஆகியவை முதலீடுகளை ஈர்ப்பதற்கு அவசியமானவை என்றும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமாட்டா தெரிவித்தார்.
ஜப்பான் அரசின் 65 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில் ஹபரணை – வேயாங்கொட மின் பரிமாற்றத் திட்டம் புதன்கிழமை (செப்டம்பர் 3) ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜப்பானி தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமாட்டா, எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் வசந்த எதிரிசூரிய, மற்றும் ஜைக்கா நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமைப் பிரதிநிதி கென்ஜி குரோனுமா ஆகியோர் ஹபரணை – வேயாங்கொட மின் பரிமாற்றத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் விழாவில் கலந்துகொண்டார்.
இந்தத் திட்டம், ஹபரணை மற்றும் வேயாங்கொட இடையே குறைந்த வலு மின் பரிமாற்ற வழிகள் மற்றும் துணை மின் நிலையங்களை அமைப்பதன் மூலம் இலங்கையின் மின் விநியோகத் திறனை வலுப்படுத்துவது, மின் விநியோகத்தின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவது, மற்றும் மின் பரிமாற்ற இழப்பைக் குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 11 ஜப்பானிய கடன் திட்டங்கள் கடந்த ஜூலை மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், முடிக்கப்பட்டு இலங்கைக்கு கையளிக்கப்படும் முதல் திட்டம் இது என்பதால் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்நத நிகழ்வில், உரையாற்றிய ஜப்பானிய தூதுவர் இசொமாட்டா, கடந்த பத்தாண்டுகளாக இலங்கை மின்சாரத் துறைக்கு ஜப்பான் வழங்கிய உதவிகளை நினைவுகூர்ந்தார். இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களான குறைந்த மின்வலு இழப்பு, அதிக திறன் மற்றும் நீண்ட தூர மின் பரிமாற்றம் குறித்து அவர் எடுத்துரைத்தார். இந்தத் திட்டம் மின் பரிமாற்ற இழப்பைக் குறைப்பதன் மூலம் கரியமில வாயு வெளியேற்றத்தையும் குறைக்க உதவும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6-இன் கீழ் இருதரப்பு ஒத்துழைப்பான கூட்டு வரவு பொறிமுறை (JCM) மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதில் ஜப்பான் தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்றும், இலங்கையில் நிறைவடைந்த அல்லது நடைபெற்று வரும் மூன்று சூரிய சக்தி மின்திட்டங்கள் இதற்கு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது மிகவும் முக்கியமானது என வலியுறுத்திய தூதுவர், ஊழலை ஒழிப்பது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, வணிகச் சூழலை மேம்படுத்துவது மற்றும் தெளிவான தொழில்துறை மேம்பாட்டுக் கொள்கைகளை உருவாக்குவது ஆகியவை முதலீடுகளை ஈர்ப்பதற்கு அவசியமானவை என்றும் தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி இங்கு உரையாற்றுகையில், இந்தத் திட்டம் இலங்கையின் மின் விநியோக அமைப்பின் ஒரு முக்கியமான பகுதி என்றும், இது நிலைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் அதிக திறனை உறுதி செய்யும். கடந்த காலத்தில் ஏற்பட்ட மின்தடைகளை இது தடுக்க உதவும். மேலும், ஜப்பானிய மக்களின் நீண்டகால நட்பு மற்றும் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். எதிர்காலத் திட்டங்களில் மேலும் பல ஜப்பானிய முதலீடுகளை இலங்கை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.