பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கடந்த ஆண்டு நிகழ்ந்த துயரமான கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 11 கிரிக்கெட் ரசிகர்களின் நினைவைப் போற்றும் வகையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) நிர்வாகமும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கமும் (KSCA) இணைந்து விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளன. இதன்படி, மைதானத்தின் நுழைவு வாயில் பகுதியில் ஒரு நினைவுப் பலகை நிறுவப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் நினைவாக 11 இருக்கைகள் நிரந்தரமாக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகள் சர்வதேச அல்லது ஐபிஎல் போட்டிகளின் போது விற்பனை செய்யப்பட மாட்டாது; மாறாக, அந்தப் பகுதி அவர்களின் நினைவாகத் தனிமைப்படுத்தப்பட்டு மரியாதையுடன் பராமரிக்கப்படும்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள KSCA தலைவர் வெங்கடேஷ் பிரசாத், "உயிரிழந்த 11 ரசிகர்களின் நினைவைப் போற்றுவது மிக முக்கியமானது. எவருடைய வலியையும் புதுப்பிக்க நாங்கள் விரும்பவில்லை, அவர்களைக் கௌரவிக்கவே இந்த நினைவுச் சின்னத்தை அமைத்துள்ளோம்," என்று குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் மார்ச் 28-ம் திகதி ஐபிஎல் 2026-ன் முதல் போட்டியில் ஆர்சிபி அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக உயிரிழந்தவர்களின் பெயர்கள் திரையில் காட்டப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மைதானத்தில் விரிவான ஒத்திகைகள் நடத்தப்பட்டு, நிபுணர் குழுவின் அனுமதி பெறப்பட்ட பின்னரே போட்டிகளை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக