இந்தியக் கடற்படையின் புகழ்பெற்ற பாய்மரப் பயிற்சி கப்பலான ஐஎன்எஸ் தரங்கிணி (INS Tarangini), திருகோணமலை துறைமுகத்தில் வந்து இலங்கை கடற்படையினருக்கான விசேட பயிற்சிகளை உத்தியோகபூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த பயிற்சிகள் 2026 பிப்ரவரி 27 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.
இது இந்தியா–இலங்கை நட்புறவை வலுப்படுத்தும் ‘நட்புறவுப் பாலங்கள் (Bridges of Friendship)’ திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த பயிற்சியில் இலங்கை கடற்படையினரைக் குறிக்கும் 25 பயிற்சி அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
ஆரம்ப நிகழ்வில் இலங்கைக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் ஆனந்த் முகுந்தன் கலந்து கொண்டார். பயிற்சியில் ஈடுபடும் இலங்கை கடற்படை வீரர்களின் குடும்பத்தினரும் கப்பலுக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் கப்பலின் உட்பகுதிகளைப் பார்வையிட்டு, வீரர்களின் பயிற்சிச் சூழலையும் நேரில் கண்காணித்தனர்.
கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் நிதின் கஜ்ஜார் கூறியதாவது:
"இந்திய–இலங்கை இடையிலான ஆழமான மற்றும் வரலாற்று ரீதியான நட்புறவின் அடிப்படையிலேயே இந்தப் பயிற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த இன்றைய கடற்படை சூழலிலும், பாய்மரக் கப்பல் மூலம் வழங்கப்படும் அடிப்படைச் சீர்மியப் பயிற்சிகள் (Seamanship) ஒரு கடற்படை வீரரின் ஆளுமைக்கும், மன உறுதிக்கும் மிக அவசியமானவை."
இந்த பயிற்சிகளை இந்தியக் கடற்படை இலங்கை கடற்படைக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன் மூலம் இரு நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலையில் துறைமுகக் கட்டப் பயிற்சிகளை (Harbour Phase) நிறைவு செய்த ஐஎன்எஸ் தரங்கிணி, மார்ச் 2 ஆம் திகதி கொழும்பு நோக்கிப் புறப்படவுள்ளது. அந்தப் பயணத்தின் போது (Sea Phase), இலங்கை கடற்படை வீரர்கள் நடுக்கடலில் கப்பலை இயக்கும் நேரடி அனுபவங்களைப் பெறுவர்.
இந்த கப்பல் கடந்த 2004-ல் உலகைச் சுற்றி வந்த முதல் இந்தியக் கடற்படைக் கப்பல் என்ற பெருமையை பெற்றுள்ளது. எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பயிற்சிப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக