வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து இலங்கை தலைநகர் கொழும்பு நோக்கிப் பயணித்த வியட்ஜெட் (VietJet) ஏர்லைன்ஸ் விமானம், நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்தியாவின் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
வியட்ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான VJC1875 என்ற விமானத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 143 பேர் பயணித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது, அதன் ஒரு இயந்திரத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது.
இதையடுத்து விமானத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, விமானத்தை சென்னைக்கு திருப்பிச் செல்ல விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, விமானம் சென்னையில் தரையிறங்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இரவு 9.55 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் முழுமையான அவசரநிலை அறிவிக்கப்பட்டு, தீயணைப்பு வாகனங்கள், அவசரகால மருத்துவக் குழுக்கள் மற்றும் நோயாளர் காவு வாகனங்கள் உள்ளிட்ட அவசர சேவை ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
இந்நிலையில், இரவு 10.27 மணியளவில் குறித்த வியட்ஜெட் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
விமானம் தரையிறங்கியதைத் தொடர்ந்து, அதில் பயணித்த 143 பேரும் எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தின் இயந்திரக் கோளாறுக்கான காரணம் தொடர்பில் மேலதிக தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதையடுத்து நிலைமை சீரடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக