யாழ்ப்பாணத்தில் சேதமடைந்துள்ள பிரதான வீதி ஒன்றில் இதுவரை எட்டு விபத்துகள் இடம்பெற்றுள்ள போதிலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
782ஆம் வழித்தடமான யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியின் மானிப்பாய் – எழுமுள்ளி பகுதியில் குறித்த வீதி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
வீதியின் முழு அகலத்திலும் சுமார் 15 அடி நீளத்திற்கு பகுதி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிலத்துக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் விநியோகக் குழாய் சேதமடைந்ததன் காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் தண்ணீர் வீதியின் ஊடாக பாய்ந்துள்ளது.
பின்னர் குறித்த குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்ட போதிலும், தண்ணீர் காரணமாக சேதமடைந்த வீதி இதுவரை உரிய முறையில் சீரமைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால் குறித்த பகுதியில் காப்பெற் உடைந்த நிலையில் காணப்படுவதுடன், வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சேதமடைந்த பகுதியை மையமாகக் கொண்டு இதுவரை எட்டு விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீதி வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமானதாக காணப்படுகின்ற நிலையில், இதனை உடனடியாக சீரமைக்க வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருப்பதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வீதி தொடர்ந்து சீரமைக்கப்படாமல் காணப்பட்டால் எதிர்காலத்தில் பாரிய விபத்துகள் ஏற்படுவதுடன், உயிரிழப்புகளும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக மக்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் விபத்துகள் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர், சேதமடைந்துள்ள குறித்த வீதிப் பகுதியை உடனடியாக சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக