முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா நாடு கடத்தி பங்களாதேஷிடம் ஒப்படைக்கும் வரை, பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியாவிற்கு விஜயம் செய்யமாட்டார் என பங்களாதேஷ் அரசு தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரை மீண்டும் பங்களாதேஷுக்கு அழைத்து வருவதற்காக இந்திய அரசிடம் பங்களாதேஷ் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் பங்களாதேஷில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை நாடு கடத்துமாறு அந்நாட்டு அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவை பங்களாதேஷிடம் ஒப்படைக்கக் கோரி முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக இந்தியா முன்னதாக தெரிவித்திருந்தது.
கடந்த பெப்ரவரி மாதம் பிரதமராக பதவியேற்ற தாரிக் ரஹ்மான், பங்களாதேஷ் தலைவர்கள் தமது முதலாவது வெளிநாட்டு பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொள்ளும் வழக்கமான மரபை பின்பற்றாமல் மலேசியா மற்றும் சீனாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
கடந்த வாரம் இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமர் தாரிக் ரஹ்மானை சந்தித்ததைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடர்பான விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனா தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துகளை வெளியிட்டு வருவது, அவரை நாடு கடத்துவதற்கான செயல்முறையில் தடையாக இருப்பதாக பங்களாதேஷ் தரப்பு தெரிவித்துள்ளது.
15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த காலத்தில் சர்வாதிகார போக்கைக் கொண்டிருந்ததாக விமர்சிக்கப்பட்ட ஷேக் ஹசீனா, எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பங்களாதேஷுக்கு திரும்புவதாக இந்த மாத தொடக்கத்தில் உறுதியளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக