22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதுவரை எவ்வித கருத்தையும் வெளியிடாதது அரசியல் களத்தில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக எதிரணி அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், பிரதமரின் நிலைப்பாடு வெளிப்படையாகத் தெரிவிக்கப்படாமை தொடர்பில் எதிரணி தரப்பில் கேள்விகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த திருத்தத்திற்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வரும் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்கவின் நிலைப்பாட்டின் பின்னணியில் பிரதமரின் பங்கு உள்ளதா என்ற சந்தேகமும் சில எதிரணி தரப்பினரிடையே ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய மக்கள் சக்தியில் இருந்து மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டவரும், ஜனாதிபதிக்கு நெருக்கமான சட்டத்தரணிகள் வட்டாரத்தில் இடம்பெறும் சட்டத்தரணியுமான உபுல் குமாரப்பெருமவும் 22ஆவது திருத்தத்திற்கு ஆதரவான வெளிப்படையான கருத்தை வெளியிடாதிருப்பது அரசியல் குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு தினசரி புலனாய்வு அறிக்கைகள் ஊடாக சில தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்திற்குள் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் இருந்து 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவான தெளிவான அறிக்கையை வெளியிடச் செய்வதே தற்போதைய சூழ்நிலைக்கு சிறந்த தீர்வாகும் என பெலவத்தை தரப்பினர் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்திற்குள் பிரதமரின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக