அமெரிக்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரங்களில் ‘கம்யூனிசம்’ என்ற சொல்லை முக்கிய அரசியல் உத்தியாக பயன்படுத்தி வருவதாக சர்வதேச ஊடக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு வாரங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளில், அரசியல் எதிரிகளைக் விமர்சிக்கும் வகையில் ட்ரம்ப் பலமுறை ‘கம்யூனிசம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூயோர்க்கில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் உட்கட்சித் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர்களை கடுமையாக விமர்சிக்கும் வகையில் ட்ரம்ப் தனது அரசியல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. வெற்றி பெற்ற சில வேட்பாளர்களை அவர் “தீவிர இடதுசாரிகள்” என்றும் “கம்யூனிஸ்டுகள்” என்றும் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தின நிகழ்விலும் கம்யூனிசம் குறித்து கடுமையான கருத்துகளை அவர் வெளியிட்டிருந்தார். இந்த அணுகுமுறை அவரது ஆதரவாளர்களை ஒன்றிணைத்து, தேர்தல் பிரசாரத்திற்கு வலுசேர்க்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
குடியரசுக் கட்சி மேற்கொண்ட ஆரம்பகட்ட அரசியல் ஆய்வுகளின்படி, கம்யூனிச எதிர்ப்பு பிரசாரம் கட்சியின் பாரம்பரிய ஆதரவாளர்களை அதிகளவில் வாக்களிக்கத் தூண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இடதுசாரி ஆட்சிகளை அனுபவித்த நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய சில ஹிஸ்பானிக் வம்சாவளி வாக்காளர்களிடம் இந்த பிரசாரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என கட்சி நம்புகிறது.
எனினும், பனிப்போர் கால அனுபவம் இல்லாத இளம் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் நடுநிலை அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட வாக்காளர்களிடையே இந்த உத்தி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும், அதன் தேர்தல் விளைவுகள் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக